Saturday, October 17, 2009

தீபாவளி......

இந்த ஆண்டு எனக்கு தீபாவளி கொண்டாட்டம் ஏதுமில்லை. அதனால் மற்றவர் கொண்டாடும் தீபாவளியாக இது அமைந்தது. நான் தூரத்திலிருந்து ரசிக்கும் பார்வையாளனாக இருந்து கண்டு களித்தேன். சாதரணமாகவே தீபாவளியன்று எல்லோரும் பரபரப்பாக குளித்து முடித்து பட்டாசு வைக்க துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மத்தாப்பும் கம்பி திரியும் வைக்க பெரியவர்கள் வெடிகளை கொளுத்துவார்கள். சமீப காலமாக ஸ்பெஷல் வெடிகள் வந்து மார்க்கெட்டை கலக்குகிறது. முன்னம் கேள்விப்படாத ஆகாய வாணங்கள் கலர் கலராக வித விதமாக காசுக்கேற்ற அளவில் அழகாய் உயர்ந்து மலரும். இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை. அதனால் குழந்தைகள் வீட்டில் தங்காமல் தெருவில் நின்று வெடி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மில்களிலும் பணிமனைகளிலும் வேலை செய்வோர் போராட்ம் நடத்தி போனஸ் வாங்கி அத்தனையும் புகையாக்கி சந்தோஷப்படுகிறார்கள். இப்படி ஒருநாள் சந்தோஷப்படுவதன் அர்த்தம் என்ன யோசித்தும் புரியவில்லை. மாற்ற நாளில் முதுகொடிய வேலை செய்ய வேண்டும். அனால் பணம் கைக்கு வந்ததும் புதுத் துணி எடுத்து , தின்பண்டம் வாங்கி , பட்டாசு வாங்கி, ஒரே நாளில் அத்தனையும் காலி பண்ணுவதில் என்ன இருக்கிறது? கேட்டால் மாற்ற எல்லா செலவுகளும் அவசியம் தானா என்று எதிர் கேள்வி வருகிறது. யார் பதில் சொல்வது?

Monday, October 12, 2009

உன்னைப்போல் ஒருவன்.

மலையாளத்தில் சாணக்யன் என்ற ஒரு படம் வந்தது. டெக்னாலஜி எப்படியெல்லாம் பயன்படுத்த படுகிறது என்று வியக்க வைத்தது அந்தப் படம். பின் குருதிப் புனல், காக்க காக்க இரண்டும் போலீஸ் காரரின் குமுறல்களை வெளிப்படுத்தின. இப்பொழுது எல்லாவற்றையும் குழைத்து ஒரு படம் உன்னைப்போல் ஒருவன். இதில் நெட்வொர்க் ஹாக்கிங் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்க முடியும் என்று சொல்கிறது. மோகன்லால் ஒரு போலீஸ் எப்படி தன் தொழிலை நேசிக்க முடியும் என்று காட்டுகிறார். கதை ரொம்ப சிம்பிள். ஒரு வெடிகுண்டு மிரட்டல் சென்னை போலீசை ஓடவைக்கிறது. தீவிர வாதிகள் நான்குபேரை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் ஊரில் குண்டு வெடித்து உயிர்சேதம் ஏற்படும் என்ற மிரட்டல். இறுதியில் விடுவிக்கப்பட்ட தீவிரரவாதிகள் குண்டு வைத்து கொல்லப்படுகிறார்கள். இறுதியில் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் அழிக்க முடியும் என்ற தத்துவம்.

படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அனாமதேய கமலகாசன் துளியும் சிரமம் இல்லாமல் தன் பங்கை செய்திருக்கிறார். ஆனால் ஒரு சிக்கலான கட்டத்தில் எவ்வளவு டென்ஷன் ஆகா முடியும், ஒரு நல்ல முடிவு காண எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் ஐ . ஜி. ஆர். மாராராக மோகன்லால் திறமையாக செய்திருக்கிறார். கமலகாசன் போன்ற ஒருவர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய போலீசுக்கு மிரட்டல் விடும்போழுதே இது வேறே எதோ விஷயம் என்று ஒரு பொறி தட்டுகிறது. இந்த வேஷத்தில் நாசர் நடித்திருந்தால் நமக்குள் வேறு மாதிரி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி , பிறகு இறுதியில் தீவிரவாதிகளைக் கொல்லும்பொழுது நமக்கு ஒரு ஆச்சரியம் கலந்த திருப்பம் ஏற்பட்டிருக்கும்.

தீவிரவாதத்துக்கு மருந்து தீவிரவாதம்தான் என்ற கருத்து மிகவும் ஏமாற்றமளிக்கிறது. காந்தியை இடதுகைப் பழக்கதுகாக ஏற்கும் ஒருவர் அவர் கொள்கைகளை புறக்கணிப்பது நன்றாயில்லை. கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பரத் ரெட்டி மிகவும் நன்றாக உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான படம். அதில் ஐயமில்லை. ஆனால் நெருடல்களுக்கும் பஞ்சமில்லை.

Monday, October 5, 2009

பழைய பள்ளி நினைவுகள்.


அக்டோபர் 2.
இந்த நாள் என் நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவான நாள். நான் ரயில்வே ஸ்கூலிலிருந்து வெளிவந்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து சிரித்து மகிழ்ந்த நாள். பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் வணங்கி வழிபடும் பள்ளியையும் ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்த நாள். இந்த நாளில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து ஒரு பெரிய கூட்டம் நடத்தி தாங்கள் வரும் நாட்களில் செய்ய இருக்கும் சேவைகளை வெளிப்படுத்தினோம். இந்த பள்ளிக்கு நல்ல குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் ஒன்றை கொடையளிதோம்.
பெரிய விருந்து ஒன்றுமில்லைஎன்றாலும் மனம் நிறைய சந்தோசத்தை கொண்டு வந்தவரை உபசரித்தோம். பல ஆசிரியர்களும் ஆசிரியைகளும் வருகை தந்து சிறப்பித்தனர். பள்ளியில் நிலையை உயர்த்துவதற்கு பலரும் பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் நினைவுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை.

Monday, September 21, 2009

பசங்க ....

ஆரம்பத்தில் எதோ பெரியவர்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்றுதான் நினைத்தேன். ஒரு கிராமத்தில் சில சிறுவர்கள் அட்டகாசம் பொறுக்க முடியாமல் பெரியவர்கள் தவிப்பதும் , போலீஸ் அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பதுமாக துவங்கும் படம் , எதோ ஒரு கிராமத்து வாத்தியார் இவர்களைத் திருத்துவார் என்று எதிர்பார்த்தால் , மேலும் ஒரு பையன் வந்து சேருகிறான். ஊருக்கு புதிதாக வந்த பையன் , அவன் வீடு , தந்தை - தாய்இடையே பிரச்சனை , அதனால் சிறுவனின் மனநிலை பாதிப்பது , அதனை அவன் சந்திப்பது என்று செல்கிறது. சிறிவர்களை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அழுத்தமான வசனங்கள் மனதில் பதிகின்றன.
சிரித்துக்கொண்டு பார்க்க தொடங்கி , சிந்திக்கவும் வைத்து அழவும் வைக்கிறது படம். ஒரு வெட்கம் பாட்டு நல்ல இனிமை....
சமுத்திரக்கனி தொடர்ந்து இது போன்ற படங்களை தர ரசிகர்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கிராமத்து எளிமையும் இனிமையும் எதார்த்தமான வசனங்களும் மேக் அப இல்லாத முகங்களும் நல்ல கருதும் சேர்ந்தால்...... ஒரு தரமான படம் தருவது நமக்கும் நல்லதுதானே?

வாழ்கை.

தோட்டத்தின் வழியே நடந்தேன் - அங்கு
தாவி விழுந்த ஒரு விதையைக் கண்டேன்.
நம் துன்பங்களைப் போல அதனை
ஒரு புயல் வந்து தொட்டது.
நம் துயரங்களைப் போல அதனை
மழை வந்து நனைத்தது

சில வருடங்கள் கழிந்தது. அதை
சென்று பார்வையிட்டேன். - அதுவோ
துன்பங்களால் அரவணைக்கப்பட்டு
துயரங்களால் பாலூட்டப்பட்டு
மரமாக வளர்ந்திருந்தது. விதைக்கு
மழையும் புயலும் தாயாக இருந்தது.

மனிதர்களின் வாழ்க்கையான விதையும்
மரமாக வெற்றியடையச் செய்வதும்
அவரவர்கள் வாழ்வில் வரும்
துன்பங்களும் துயரங்களுமே.
மரம் வளர்ப்போம் . மழை பெறுவோம் .
வாழ்கையை வாழ்வோம் வெற்றி பெறுவோம் .

புவனா .

Friday, September 18, 2009

ஈன்றெடுத்த தாய்


அகிலம் என்னும் புதுமையை நீ


அறிமுகம் செய்தாய் - உன் படைப்பிற்கு


ஆண்டவனை நிகர் கூறினேன்



புதிதாய் ஈன்றவனைக் காண நீ


புது வலிகளைப் பொறுத்தாய் - உன் பொறுமைக்கு


பூமியை நிகர் கூறினேன்



நடப்பது முதல் நடனம் புரியும்வரை


கற்றுத் தந்தாய் - உன் போதனைக்கு


குருவை நிகர் என்றேன்



அண்டத்தை அறிமுகம்செய்தாய் ஆனால் இன்று


ஆண்டவனே கதியென்று முதியோர் இல்லம் புகுந்தாய்


அப்படி இருந்தும் "அவன் என் மகன் " என்றாயே


தாயே ! உன் தாய்மைக்கு நிகர் யாரம்மா ?



புவனா .



என்றும் அவர்.

எங்கும் காணாமல் ஏங்கித் தவித்தேன்
என் தாயவளிடம் என்னவர் எங்கே என்றேன்
எவரும் அறியாமல் எமன் எனும் கள்வன்
எங்கேயோ எடுத்துச் சென்றான் என்றாள்.

அவரின் பிரிவு தாளாமல் அருந்துயருற்றேன்
ஆதவனை அவரை தேடச் சொன்னேன்
அவனோ அவரைக் காணாமல்
ஆணுடன் அமர்ந்த பெண்போல் மலையிடுக்கில் ஒளிந்தான்

துயரம் தாங்காமல் துக்கம் குறையாமல்
திங்களைத் தேடி போகச் சொன்னேன்
சென்றான் அவனும் தேடித் தேய்ந்தான்
காணாததால் அவமானத்தால் தொலைந்தான்

மனம்நொந்து மேகத்தை தேடச் சொன்னேன்
மலைகளின்பின் வேகமாய் மறைந்தான்
கண் கலங்கியது கணம் நின்று கண்மூடினேன்
மனம் சொன்னது "பைத்தியமே அவர் என்னிடம் உள்ளார் " என்று.

அன்று எழுந்தேன் என்றும் நடப்பேன் அவருக்கான நினைவுடன்
என்றென்றும் அன்புடன் நான்.

இவண்
புவனா

Wednesday, September 9, 2009

நீண்ட இடைவேளைக்குப் பிறகு......

மீண்டும் வணக்கம் நண்பர்களே .நீண்ட நாட்களாக என்னை ஆட்கொண்டிருந்த என் தந்தையின் இழப்பின் துயரம் என்னை எழுதத் தூண்டவில்லை. எல்லாமே அர்த்தமற்றதை ஓடிக்கொண்டிருப்பது போல ஒரு நிலை . என் சொந்தக் காலை தேடிக் கண்டுபிடித்து நிற்கப் பழகிக்கொண்டிருந்தேன் இத்தனை காலம். என் சொந்த நிழல் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி வரும் நாட்கள் வாழ்க்கைக்கு வளமும் மகிழ்ச்சியும் சேர்பதாக இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இனி அடிக்கடி உங்களை சந்திக்கும் முனைப்பு இது.

Friday, January 2, 2009

புலர்ந்தது புத்தாண்டு.

மனித வாழ்வின் ஆதாரமாக இருப்பது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தான் சந்தித்த இனிய அனுபவங்களையும் தனக்கேற்பட்ட வருத்தங்களையும் நஷ்டங்களையும் அசைபோட்டு வரும் ஆண்டில் மேன்மையுற சிறந்ததாக புதிய வழிகளை நாடி மேற்கொள்ளும் வழக்கம் ஒவ்வொரு புத்தாண்டிலும் இருக்கிறது.

சென்ற ஆண்டில் நாம் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதும் புதிய உறுதிமொழி ஏற்பதும் உலகளாவி வரும் வழக்கம். ஆனால் எத்தனைபேர் உறுதியுடன் இருப்பர் என்பது வேறு. சென்ற ஆண்டின் இழப்புக்கள் தந்த பாடங்களை எத்தனை பேர் கற்றிருக்கின்றனர்?

புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து திரும்பவும் சகஜ வாழ்வுக்கு திரும்பும் பழைய மனிதர்களாகவே எல்லோரும் காண்கின்றனர். வாழ்த்துச் சொல்வதும் S.M.S. அனுப்புவதும் புது காலண்டர், டைரி சம்பாதிப்பது மட்டுமே புத்தாண்டின் முக்கிய குறிக்கோளாகி விடுகிறது. மற்றபடி ஒருவர் தம் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்கும் உணர்வு குறைந்து விடுகிறது.