Monday, June 30, 2008

அரற்றல் . . .

இரண்டு மூன்று நாட்களாகவே என்னவோ சரியில்லை . என்னவென்று சொல்ல முடியாத ஒன்று என்னை படுத்திக்கொண்டிருந்தது . ஒன்றுமில்லாததுக்கெல்லாம் கோபம் வருகிறது . எனக்கே என்னை பிடிக்காமல் போவதுபோல ஒரு கோபம். எதிர்படும் யாரும் கனிவாய் கேட்கும் கேள்விகளும்கூட என்னை எரிச்சலூட்டுகிறது . இந்த அவஸ்தையை என்னவென்று சொல்வது ? புரியவில்லை. நேற்று விடுமுறை. காலையில் கொஞ்சம் அதிக நேரம் தூங்கலாம்தான் . அனால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். எந்தக் காரணமுமின்றி நாராயணனை வைது, அடித்து விட்டேன் . பாவம் அவன் அழுதுகொண்டிருந்தான். திடீரென்று ஏதோ தோண வண்டியைக் கிளப்பி டவுனுக்கு சென்றுவிட்டேன். சென்ற இடங்களில் எல்லாம் ஏதோ ஒன்று என்னை நிற்க ஒட்டாமல் விரட்டியது. திரும்பவும் வீட்டுக்கு வந்தேன் . திரும்பவும் பழைய அவஸ்தை. குளிரடிப்பது போலவும் , உடம்பெல்லாம் வலிப்பது போலவும் இருந்தது. வாயு மாத்திரை அது இது என்று என்னென்னவோ முயன்று பார்த்து கடைசியாக புழக்கடைக்கு போய் அப்படியே வாந்திஎடுத்தேன் . கொஞ்சம் தெளிந்தது போல இருந்தது. வந்து படுத்துக்கொண்டேன். ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அரற்ற வைத்தது. சாதரணமாக ஐயோ அம்மா என்று அரற்றும் ஆளல்ல நான் . காய்ச்சல் வந்தால் எல்லோரையும் படுதிஎடுதுவிடுவேன் . எனக்கு தோன்றும் பழைய பாடல்களை உரக்க பாடுவதே என் அரற்றல் . மற்றவர்களை உறங்க விடாமல் கத்துவேன் . அப்படிதான் இன்றும் கத்தினேன். என்ன செய்வது ? நாளையாவது எல்லாம் தெளிந்து அலுவலகம் போனால் பரவாயில்லை.

Saturday, June 21, 2008

இருபது ஆண்டுகளின் இனிமை. . .

இன்றுடன் நான் மணமுடித்து இருபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . இந்த இருபது ஆண்டுகளில் நான் கண்ட , அனுபவித்த இல்லற இன்பம் வார்த்தைகளில் அடங்காது . இன்னும் பசுமையாய் , இன்னும் புதுமையாய் , இன்னும் இனிமையாய் என் இல்லறம் அமையக் காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? என் இல்லக் கிழத்தி , என் அகமுடையாள் , என் வாழ்வில் புகுந்து என்னை ஆட்கொண்ட நல்லாள் , இன்றும் தன் இளமையும் புதுமையும் மாறாமல் , இன்முகத்துடன் செய்யும் சேவைகள் சொல்லிலடங்கா .
இதுநாள் வரை நான் சோர்வு கண்டதில்லை அவளிடத்தில் . சுற்றத்தாரை அனுசரித்து அரவணைத்து ஆதரவு காட்டி அவள் இல்லம் நடத்தும் பாங்கு போற்றுதற்குரியது . துன்பம் சூழும் நேரத்தில் அவள் துணையாய் நின்று தோள் கொடுத்து , ஆதரவு கூறி , அறிவுரை கூறி ஒரு அருமையான தோழியாய் , அமைச்சாய் , அன்னையாய் பல நிலைகளில் இருந்து என்னை நிலை நிறுத்தியுள்ளாள் .

இந்த இருபது ஆண்டு இல்லறத்தில் , நான் இழந்தவை எதுவும் பெரிதாக இல்லை . மாறாக கற்ற பாடங்களும் , தேடிப் பெற்ற செல்வங்களும் ஏராளம் . உழைப்பின் வலிமையையும் , உறுதியையும் , நமக்கு உரியது எக்காலமும் கைகூடும் என்ற திண்மையையும் உணரப் பெற்றேன் . நல்லாசானாய் தந்தை வழிநடத்த , நற்றுணையாய் தாய் இருந்திட வாழ்வில் நற்றடம் பதித்திட வேறென்ன கேட்பேன் . பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் குறிப்பறிந்து நடந்தால் , பெற்றோர்கள் பிள்ளைகளின் உளமறிந்து உறுதுணையாக இருப்பர் . என் குடும்பத்தில் இதன் முழுமையை உணர்கிறேன் . என் பிள்ளைச் செல்வங்கள் தங்கள் துறைகளில் சிறந்து மேன்மை நிலையடைய உழைத்து , என் பெற்றோருக்கு என் நன்றிக்கடனைச் செலுத்துவேன். எனக்கு உறுதுணையாய் , என் நிழலாய் , என் மனைவி இருக்க , வாழ்வில் எந்த தூரமும் கடக்கக்கூடியதே , எந்த சுமையும் சுமக்கக்கூடியதே
, எந்த இலக்கும் எட்டக்கூடியதே , எல்லா வெற்றியும் ஈட்டக்கூடியதே

Sunday, June 15, 2008

தசாவதாரம் . . .

குருவியைப் பறக்க விடுங்கள் என்று எழுதியதும் , நிறையப்பேர் என்னிடம் "நீ எப்போ விஜய் ரசிகன் ஆனாய் " என்று கேட்டார்கள். நான் வெறும் ரசிகனாக இருந்து எழுதியது அது. யாருக்கும் ரசிகனாக அல்ல. இன்று நான் தசாவதாரம் பார்த்தேன். பலவிதமாக விளம்பரங்கள் வந்து நம் எதிர்பார்ப்பை உச்சத்துக்குக் கொண்டு போயிருக்கலாம். பலவிதமான விமர்சனங்கள் அவற்றை கீழே தள்ளியிருக்கலாம். ஆனால் கமலிடம் நாம் எப்பொழுதும் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அதுதான் வித்தியாசமான படைப்பு. அதை நிறைவாகச் செய்திருக்கிறார் இந்த அற்புதப் படைப்பாளி .

வேறு எதிர்பார்ப்புகள் இன்றி , இது நல்லா இருக்காது என்ற முன்கணிப்பின்றி , இருப்பதை ரசிக்கலாம் என்று திறந்த கண்ணொடும் மனதோடும் தியேட்டருக்கு செல்வோர்க்கு நல்ல விருந்துதான் தசாவதாரம் . கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவ்வளவும் கமல் என்ற மனிதனின் மீதுள்ள காழ்ப்பினால் மட்டுமே என்பது படம் பார்த்தால் புரியும் . சீரான ஒரு வரிக் கதை . அதை சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் டைரக்டர் ரவிக்குமார். பல உப கதைகளும் அழகாகக் கோர்க்கப்படிருக்கின்றன. வெவ்வேறு வித்தியாசமான தோற்றங்களில் கமலின் திறமையும் உழைப்பும் வெளிவந்திருப்பது நிதர்சனம் .

ஒரு பெரிய படைப்பில் சிறு சறுக்கல்கள் இருந்தால் அதன் முழுமையை ஒன்றும் பாதித்துவிடாது. அப்படி சில சறுக்கல்கள் இருந்தால் (உதாரணம் : இன்ஸ்பெக்டர் பலராம் , ஹெளிக்காப்டரிலிருந்து பைனாக்குளர் மூலம் கிருமிகளை காண்பது ) அவற்றை ஒதுக்கிவிட்டு மற்றவற்றை ரசிக்கலாம். மாறாக மதத்தை தூஷிக்கிறார் , கடவுளை வெறுக்கிறார் என்பன போன்ற வாத விவாதங்களில் ஈடுபடுவது நன்றாக இல்லை.

பத்து கதாபாத்திரங்கள் வெவ்வேறு கெட்-அப்பில் மிகவும் நேர்த்தியாக அமைத்திருக்கின்றன . வில்லன் பிளெச்சர் , பாடகர் அவதார் சிங் , வைணவர் ரங்கராஜன் நம்பி என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் தன்மை குன்றாவண்ணம் செய்திருக்கிறார் கமல். பாராட்டுக்கள் . படப்பிடிப்பும் காட்சி அமைப்பும் கதையோடு இசைந்து கண்ணை உறுத்தாத வண்ணம் வந்திருக்கிறது . இசை . . . அதுமட்டும் பரவாயில்லை ரகம். ஸ்பெஷல் எபெக்ட் நன்றாகவும், சுனாமிக் காட்சிகளில் பிரும்மாண்டமாகவும் உள்ளது. "வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நாடாக இருக்கட்டும் " , " கடவுள் இல்லை என்று சொல்லவில்லை , இருந்தால் நன்றாக இருக்கும் " என்பன போன்ற சிந்தனைகளும் நிறைந்து மனித நேயத்தை நிறுத்துகின்றன . நாம் பார்க்கும் பார்வையில்தான் கடவுள் வேறுபடுகிறார். உண்மையாக , இன்மையாக என்று. அதுபோலத்தான் இந்தப்படமும் ரசிகனுக்கும் , விமர்சகனுக்கும் அவரவர் பார்வைபோல் நன்றாகவோ , இல்லாததாகவோ இருக்கும். நன்றி கமல் . இனி நீங்கள் சதாவதாரம் படையுங்கள்.

Sunday, June 8, 2008

என்னம்மா தோழி ....

இராமநாதன் புதிதாகக் கார் வாங்கியிருந்தார். அதை நான் ஒட்டிப் பார்க்க வேண்டும் என்று பிரியப்பட்டார் . நானும் என் அகமுடையாளுடன் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வரலாம் என்று புறப்பட்டேன் . ரேடியோவில் என்னமோ பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ரோட்டில் கவனம் இருந்ததால் பாட்டு மனதில் பதியவில்லை . வீட்டிற்க்கு வந்து நின்ற பின் " என்னம்மா தோழி " என்ற வார்த்தைகள் திடீரென்று என்னை "பொம்மையை காணோம் " என்று பாட வாய்த்தது. கூர்ந்து கவனித்தில் அது "என்னம்மா தோழி பொம்மையை காணோம் , நான் என்ன செய்யப்போறேன் " என்று முடிந்தது. உடனே என் அம்மாவை அழைத்து கேட்கச் செய்தேன் . அது அவர்கள் சிறு வயது முதல் பாடி வந்த பாடல் . அதன் முதலடியை யோசித்து தலையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். சித்தியிடம் அதைப் பாடிக் காண்பித்ததும் "சின்னச் சின்ன பொம்மை , இது சீருடைய பொம்மை " என்று முதலடியை எடுத்து தந்தார்கள்.

அடுத்த நாள் அலுவலகத்திலிருந்து வந்த என்னை ரெடியோவினருகில் ஓட்டிச் சென்றார் என் சித்தி . அதே பாடல்தான் படிக்கொண்டிருந்தது . கண்டிப்பாக எதாவது புதுப் படத்தில் இந்தப் பாட்டை சேர்த்திருப்பார்கள் . தேடிப் பிடிக்க வேண்டும் . அருமையான இசைப் பின்னணியுடன் அழகாகப் பாடப்பட்ட பாடல். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் .

Saturday, June 7, 2008

வீடு மாறும் வைபவம்......

ஒரு வீட்டை காலி செய்து புது வீட்டுக்கு குடிபெயர்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இதை நான் இன்று உணர்ந்தேன். என் மைத்துனரின் வீடு மாறும் வைபவம் இன்று நடந்தேறியது. அதிலிருந்து நான் கண்டறிந்ததுத்தான் மேற்கூறிய பொன்மொழி. முதலில் வீட்டுப் பொருட்களைப் பேக்கிங் பண்ணும் சடங்கு தொடங்கியது. தேவையான பொருட்கள் , தேவையற்ற பொருட்கள் என்று பிரித்து பெட்டிகளாக கட்ட வேண்டும் . ஒருவருக்குத் தேவையற்றதான பொருள் இன்னொருவரின் பொக்கிஷம் . ஒருவரின் தேவையான பொருள் இன்னொருவருக்குக் குப்பை. இதில் மத்தியஸ்தம் பண்ணி பெட்டிகளில் அடைத்து கட்டி வைக்க வேண்டும் . இதில் ஒவ்வொருவருடைய கமெண்டையும் கேட்க வேண்டுமே. புல்லரித்துவிடும் போங்கள். தேவையற்ற பொருட்களைத்தான் இத்தனை காலமும் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்ற உண்மை ஒதுக்கிய பொருட்களைப் பார்த்தால் தெரியும். சீனு சின்ன வயதாக இருக்கும்பொழுது வாங்கிய சமாச்சாரங்கள் அத்தனையும் இன்று சீண்டுவரின்றி இருந்தது. பழைய மரச் சாமான்கள் , அலங்காரப் பொருட்கள் , துணிக் கடையில் விளம்பரத்துக்காகக் கொடுத்த பைகள் , எதற்கு வாங்கினோம் என்று நினைவில்லாத பழைய புத்தகங்கள் , பட்டியல் நீண்டுகொண்டே போகும் . அத்தனை பொருட்களையும் பிரித்து வைத்து கட்டி வண்டியிலேற்றி புது வீட்டுக்கு கொண்டுசென்று இறக்கியாகிவிட்டது. இனி அடுத்த காமெடி அவற்றை புது வீட்டில் செட்டில் பண்ணுவதில் இருக்கிறது . பரவாயில்லை . அது நாளைதானே . பார்த்துக்கொள்ளலாம் .

Thursday, June 5, 2008

மறைந்திருக்கும் கலைஞன்......

மோகன், எனக்குத் தம்பி என்பதைவிட ஒரு நல்ல நண்பன் என்றே நான் என்றைக்கும் நினைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக கோவையின் வீதிகளில் சுற்றியதும் , கல்லூரிகளில் படியேறி இறங்கியதும், கிரிக்கெட் , பேட்மிண்டன் விளையாடியதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்ததும் ..... அவை மறக்க முடியாத நாட்கள்.
தன் வாழ்வில் ஒரு உன்னத இடத்தைப் பிடிக்கும் நோக்கு மோகனுக்கு என்றைக்கும் இருந்தது. பலவிதமான வியாபாரங்களில் , பலருடன் கூட்டு சேர்ந்து அவன் கண்டது அலைக்கழிப்பும் , பொருள் நஷ்டமும்தான். இவன் ஏன் இப்படி பணத்தை கொடுத்து ஏமாறுகிறான் என்று நான் வருந்தியதுண்டு. ஆனால் மோகனுக்கு ஏதேனும் ஒரு தொழிலில் நிலைத்து நின்று முன்னுக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
ஒரு முறை நான் பொருட்காட்சிக்கு போனபோது , அங்கு ஒரு ஸ்டாலில் மாஜிக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற போர்டை பார்த்தேன். கையிலிருந்த பணத்தில் சில சாமான்களை வங்கி வந்தேன். வீட்டில் வந்து செய்து காண்பித்ததில் பலருக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதில் மோகனும் ஒருவன். ஆனால் அவனுக்கிருந்த வியாபார நோக்கில் இதில் ஈடுபடுவான் என்று சிறிதும் நினைக்கவில்லை.
அடுத்த வருடம் அதே பொருட்காட்சியில் அந்தக் கடைக்காரருடன் சிநேகிதம் பிடித்து தொழிலுக்குள் புகுந்துவிட்டான் மோகன். கையிலிருந்த பணத்தை செலவு செய்து வழக்கம்போல் இதிலும் கையை சுட்டுக்கொண்டான். ஆனால் இந்தமுறை தொழிலை விட்டு ஓடவில்லை. பல இடத்தில் சுற்றித் திரிந்து பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டான். சிறிது சிறிதாக வியாபாரம் முன்னேறி இன்று தான் நினைத்த உன்னத இடத்தை பிடித்துவிட்டான். இன்று மோகன் ஒரு மாஜிக் வியாபாரி. தன்னிடம் வரும் மாஜிக் கலைஞர்களுக்கு தந்திரங்களை செய்து காட்டி அவர்களுக்கு விற்ப்பது தான் தொழில். அனால் அவன் மற்றவர்களுக்கு செய்து காண்பிக்கும் அழகைப் பார்க்கும்போது அவனுக்குள் ஒரு அரிய கலைஞனை ஒளித்து வைத்துள்ள விஷயம் புலப்படுகிறது. இதுவரை மேடையேறி ஒருமுறைகூட தன் திறைமையை மோகன் வெளிப்படுதியதில்லை. அனால் அவனிடம் வரும் கலைஞர்கள் அனைவருக்கும் தெரியும் இந்த கலைஞனை. அனாலும் மோகன் இன்னும் வியாபாரிதான்.