Sunday, May 25, 2008

கோடை(வை)யை குளிர்விக்க வந்த மழை...

இன்று மதிய உணவுக்கு வெளியில் செல்ல தயங்கியிருந்தேன் , காரணம் வெயில். சுட்டெரிக்கும் வெயிலில் சென்று சாப்பிடுவதைவிட பட்டினி கிடக்கலாம் என்று தோன்றியது. தயக்கத்துடன் வெளியில் வந்த நான் மேற்கே கரிய வானத்தைப் பார்த்ததும் இன்று மழை வந்தால் நல்லது என்று நினைத்துக்கொண்டேன். நினைத்த மாதிரியே வந்தது மழை . பெருமழை. வீதியெங்கும் ஆறாக நீர் ஓட, பார்க்கவே பரவசமாக இருந்தது.
வீட்டிற்கு வரும் வழியெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நஞ்சுண்டாபுரம் சாலையில் ஓரிடத்தில் டிராபிக் ஜாம். என்னவென்று பார்த்தால், சாக்கடை அடைப்பு. அடைத்துக்கொண்டிருந்தது பிளாஸ்டிக் கேரி பேக் ஒரு குவியலாக. எத்தனை நாளாக தேங்கியிருந்த குப்பையோ இன்று தன் வேலையை செய்துகொண்டிருந்தது. சாக்கடை நீர் வழிந்து சாலையில் குளம்போல் தேங்கி, நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல வழியின்றி நின்றிருந்தன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், நிறுத்த வேண்டும் என்று வாய் கிழியப் பேசுவோரும், சட்டம் போட்டுவிட்டு அதை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் காட்டுவோரும் இன்றும் இந்தச் சாலையில் சென்று வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
மழை பெய்துகொண்டிருந்தபோது வீசிய குளிர் காற்றையும் மீறி , மழை நின்றபின் பூமியின் வெப்பம் வெளிக்கிளம்பி முன்பைவிட உஷ்ணமாகத் தாக்கியது. இது கோடையின் இறுதி நாட்களாக இருக்கும். கோவைக்கு இனி மாரிக்காலம் குளிர்ந்ததாக இருக்கும். பிளாஸ்டிக் பைகளை குப்பையில் போடுவோரும் தங்கள் பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பர். இதற்க்கு முடிவு.....? கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. பூனையும் ரெடி . மணியும் ரெடி. கட்டுபவர்தான் (நாம்தான்) இன்னும் ரெடியாகவில்லை.

No comments: