Sunday, May 11, 2008

பரீட்சை (முடிவு) ஜுரம்.

இது பரீட்சை முடிவுகள் வெளியாகும் நேரம் . சாதாரணமாக எல்லோரும் தங்கள் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் நாட்கள். முழுப் பரீட்சை முடிந்து விடுமுறையைக் கழிக்க ஊருக்குச் சென்றாலும் , விடுமுறையை எத்தனை இன்பமாகக் கழித்தாலும், இந்த ஜுரம் எப்படியும் தொற்றிக் கொள்ளும். நல்ல மார்க் எடுத்து பாசாகும் படிப்பிஸ்டுகளுக்கும் , என்னை மாதிரி காலத்தின் கொடுமையால் பாசாகும் மக்குகளுக்கும் ஒரே மாதிரி இந்த ஜுரம் வந்து படுத்தும். நல்ல மார்க் வாங்கினால், நான் நன்றாகப் படித்தேன். மார்க்கு கம்மியானால் , ரொம்ப ஸ்ட்ரிக்ட் கரெக்ஷன் என்று சாக்கு. இப்படி சமயத்துக்கு தக்கவாறு பதில் ரெடியாக இருக்கும். ஆனால் ரிசல்ட் வந்து அடுத்த நாளே ஜுரம் போய் விடும் , ரிசல்ட் எப்படி இருந்தாலும். இப்பொழுது போல முன்னமேயே பள்ளிக்கு வந்து புக்ஸ் , யுனிபாரம் வாங்கும் அவஸ்தை இல்லை. அதனால் ஸ்கூல் திறந்த பின்புதான் ஊரிலிருந்தே வருவோம். அதுவரை கொண்டாட்டம்தான் . அடுத்த கால் பரீட்சை வரும்போழுதுதான் திரும்ப ஜுரம்.

இன்று முழுப் பரீட்சை லீவுக்கு யாரும் ஊருக்குப் போவதில்லை. அப்படியே போனாலும் பத்து நாட்கள் கூட சந்தோஷமாக இருக்க முடியாது. அதற்குள் ரிசல்ட், புக்ஸ், யூனிபார்ம் , டியூஷன் அல்லது கோச்சிங் கிளாஸ் இப்படி பல டென்ஷன் சமாசாரங்களும் கூடவே வந்து பயமுறுத்தும். இதில் எங்கே லீவை என்ஜாய் பண்ணுவது. மார்க்கு சுமாராக வாங்கும் மக்கள் தப்பித்தார்கள். பாஸ் ஆனால் சந்தோஷம்தான். இந்த படிபிஸ்ட் ஜாதி தான் பாவம். 91 க்கும் , 91.1 க்கும் இடையில் போராட்டம். மார்க் கம்மியனால் திரும்பவும் படித்து பரீட்சை எழுத வேண்டும். அப்புறம் மேல்படிப்புக்கு இடம் பிடிக்க அப்பாவை விரட்ட வேண்டும். அதிலும் நமக்குப் பிடித்த காலேஜில் இடம் கிடைக்க வேண்டும், நம் நண்பர்களும் அதே காலேஜில் சேர வேண்டும் . இப்படி பல தொந்தரவுகள். நண்பர்கள் வேறு காலேஜில் சேர்ந்துவிட்டால் நமக்கு நரகம்தான். அப்புறம் வேலை தேடும் படலம். எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. SSLC முடிந்தால் முக்கால்வாசி ஜனம் டைப் ஷார்ட்ஹேண்ட் படிக்க போய் விடுவார்கள் . காலேஜ் போவது மிகச் சிலரே. அப்படியே போனாலும், ஹிஸ்டரி , காமர்ஸ் , எகனாமிக்ஸ் என்று எது கிடைத்தாலும் படிப்பார்கள் . இன்று நண்பர்கள் எதில் சேர்கிறார்களோ அதுதான் நல்ல படிப்பு. சேர்ந்த பிறகுதான் தெரியும் அதன் கஷ்ட்டம்.
எனக்குத் தெரிந்த பையனுக்கு ஒரு பிரச்சனை. 10th பெயில் ஆனால் டுடோரியல்ல சேர்ந்துடுவேன். பாஸ் பண்ணினா என்ன பண்ணறது ? பிளஸ் டூ சேர்வதா இல்லை டிப்ளமா சேர்வதா ? ஒரே குழப்பம். எப்படிப்பட்ட இமாலயப் பிரச்சனை ? இதற்கெல்லாம் நல்ல தீர்வு , படிப்பதெல்லாம் படியுங்கள். ஆனால் பரிட்சையே வேண்டாம். எப்படி என் ஐடியா ?

No comments: