Saturday, December 6, 2008

ஸ்ரீரங்கம்...

அது என்னவோ தெரியவில்லை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்குப் போனால் என்னுள் ஏதோஒரு இன்ப உணர்வு தலை தூக்குகிறது. ஏதோ ரொம்ப நாள் பிரிந்திருந்த ஒன்றை நெருங்கும் உணர்வு. என் ஆழ்மனத்தின் அடையாளம் எனக்கு சரிவர புரிவதில்லை. ஆனால் அந்த இன்பத்தை அனுபவிக்கவேண்டி திரும்பவும் அங்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பு என்னை உந்துகிறது. சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்ற போது அத்தகைய ஒரு உணர்வு ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையினால் காவிரி ஆற்றின் கரைகளைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடியது. ஆங்காங்கே மணல் திட்டுக்களும், கரையோரம் கோரைப் புல்பதர்களும், மணல் திட்டுக்களில் ஆடும் சிறார்களும், ஐய்யப்பன் பக்தர்களும் எல்லாமே பார்க்க இனிமையாக தோன்றின. வழிநெடுகிலும் சாதாரணமாக சகதியும் குப்பையும் பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்திருக்கும் வாய்க்கால்களில் இன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஸ்ரீரங்கம் போய சேரும்போது சயந்திரம் ஆகிவிட்டது. உடனே கோவிலுக்குப் புறப்பட்டு விட்டேன். முன்னொரு சமயம் போனபோது நேரம் போதாமையால் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்த முறையாவது இந்த ஆலயத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கவலை. கோவிலில் கூட்டம் அதிகமில்லை. பெருமாளை நன்றாக சேவிக்க முடிந்தது. தாயார் சந்நிதி, கண்ணாடி அறை சேவை , ஆயிரம்கால் மண்டபம் என்று எல்லாவற்றையும் ஆனந்தமாக கண்டு களித்தேன். மறுநாள் காலை விஸ்வரூபதரிசனம் காண தாய் தந்தையருடன் சேர்ந்து கோவிலுக்கு போனேன்.

விஸ்வ ரூபதரிசனம் துவங்கும் நேரம் காலை ஆறு மணி என்றரிந்துகொண்டு முன்னமே போய் தரிசன டிக்கெட் எடுத்துக் கொண்டேன். பெருமாள் சந்நிதியின் முன் ஒருவர் இருந்து வீணை இசைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஒரு பசு மாட்டை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமமிட்டு நிறுத்தியிருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு யானை அங்கு வந்து பகவானை நோக்கி நின்றது. அதற்குப் பின்னால் ஒரு குதிரை. திரை விலகியவுடன் யானை துதிக்கையை தூக்கி மூன்று முறை பிளிறியது. பின்னர் இவை எல்லாம் விலக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர். அப்பா அம்மாவுடன் சேர்ந்து சென்றால் எல்லாமே விசெஷமாகிவிடுகிறது. அப்பாவைக் கண்டவுடன் பட்டார் அவரை அருகில் அழைத்து பெருமாளை நன்றாக சேவிக்கச் சொன்னார். ஆதி செஷன், பள்ளி கொண்ட பெருமான் , ஸ்ரீதேவி , பூதேவி என்று விளக்கி எல்லாவற்றையும் காண்பித்தார். இவ்வளவு ஆனந்தம் என்று சொல்ல முடியாது. நான் நினைத்திருந்ததைவிட ஒருபடி அதிகமாக அனுபவித்தேன்.

No comments: