Wednesday, December 24, 2008

கிருஸ்துமஸ்.....


இன்று இரவு கிருஸ்து பிறந்த இரவு. போதநூரில் எப்பொழுதும் களைகட்டும் கிருஸ்துமஸ் காலம் இந்த ஆண்டு ரொம்பவும் சோகையாக இருக்கிறது. காரணம் தரியவில்லை. என் பள்ளி நாட்களில் கிருச்துமசுக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளை அலங்கரிப்பதிலும், கிருஸ்துமஸ் குடில் அமைப்பதிலும், வாழ்த்து அட்டைகள் வாங்குவதிலும், வண்ண விளக்குகள் அமைப்பதிலும் சுருசுப்பாக இருப்போம். இரவு நேரங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நண்பர்களுடன் கேரல் ரவுண்ட் போவோம். ஆண்டின் இறுதி வாரம் முழுவதும் ரயில்வே இன்ஸ்டிட்யூடில் ஆங்கிலோ இந்தியன் நண்பர்கள் கூட்டம் பாட்டும் ஆட்டமும் கேளிக்கைகளும் நிறைந்து கிளுகிளுப்பாக இருக்கும். இன்ஸ்டிட்யூட்டின்உள்ளே செல்பவர்கள் கோட் சூட் போட்டிருக்க வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனை உள்ளதால் முக்கால்வாசி ஜனம் வெளியிலிருந்தே ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும். மது பானங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்படும். மொத்தத்தில் அந்த கும்பலே இங்கிலாந்தில் இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களுக்கு வரும் ஆங்கிலத்தில் வெளுதுக்கொண்டிருக்கும்.



இன்று நிலைமை அப்படியில்லை. முதலாவதாக போதநூரின் கடும் குளிர் காணாமல் போயவிட்டது. அடுத்து நாடு இரவில் ஊரில் ரவுண்ட் வர யாருக்கும் நேரமில்லை. எங்கே டி. வீ. பார்த்துவிட்டு படுப்பதற்கே நடுநிசி ஆகிவிடுகிறதே. பிறகெங்கே மற்றதெல்லாம்.

Sunday, December 21, 2008

இது எப்படி இருக்கு?

தொலைக் காட்சியில் ஒரு சின்ன விளம்பரம். சின்னப் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், இடையில் டெண்டுல்கர் புகுந்து அவர்களுடன் சேர்ந்து விளையாடி மற்ற பெரியவர்களையும் விளையாட்டுக்குள் இழுக்கிறார். நடைமுறையில் இது சாத்தியப்படுமா? யோசித்துப் பார்த்தல் வேதனைதான் மிச்சம். டெண்டுல்கர் போல எத்தனையோ பிரபலங்கள் ஒரு தனியான நேரத்துக்காக ஏங்குவார்கள். வீட்டிலிருந்து இறங்கி தனியே கடைவீதியில் நடக்க முடியாது. சினிமாவுக்கு போகவேண்டுமேன்றால்கூட இரவில் யாருமறியாமல் (சில நேரங்களில் முக்காடிட்டு அல்லது மாறுவேடம் பூண்டு) ராஜா கதைகளில் வருவதுபோல போக வேண்டும். இவ்வளவும் தாமே வரவழைத்துக் கொண்டது. சுதந்திரத்தை விற்றுப் புகழ் தேடி இவர்கள் என்ன கண்டார்கள். இன்று உச்சியில் இருக்கும்போது சுதந்திரம் இல்லை. நாளை வீழ்ச்சி கண்டால் சீந்துவாரில்லை. இப்படியொரு புகழையா இவர்கள் விரும்புவார்கள்? யோசித்துப் பார்த்தல் இந்தப் பிரபலங்கள் தங்கள் புகழையும் விற்றுக் காசு பண்ணுபவர்கள். இவர்களுக்குப் பணம்தான் பெரிது. நாட்டுக்காக விளையாடுபவர்களும் , மக்களுக்காக உழைப்பவர்களும், ரசிகர்களுக்காக தங்கள் கலை சேவையை செய்பவர்களும் எல்லோரும் பணம் பண்ணுவதைதான் கடமையாகக் கொண்டுள்ளனர். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

தனி மனித சுதந்திரம் யாருக்கும் புரியாத பொது இவர்களின் இழப்பை நாம் பெரிதாக நினைக்கத் தேவையில்லை .

Thursday, December 11, 2008

கார்த்திகை...

கார்த்திகை பண்டிகை வந்தால் ஊரே அழகானதுபோல ஒரு பிரமை உண்டாகும். எல்லா வீடுகளின் முன்புறத்திலும் பெரியதாகக் கோலமிட்டு நடுவில் யானை விளக்கு வைத்து அதனைச் சுற்றிலும் சிறிய விளக்குகளை வரிசையாகவும் வட்டமாகவும் பல விதங்களில் வைத்து, வீட்டின் முகப்பிலும், சாளரங்களிலும், முகடுகளிலும் வரிசையாக விளக்கேற்றி வைத்து . . . . . பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும். என்னதான் மின்விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்தாலும் நல்லெண்ணெய் மணத்துடன் அகல் விளக்கு எரியும் அழகும் அது தரும் இன்ப உணர்வும் அனுபவிதவருக்கே அலுப்புத் தட்டாத அற்புதம்.

கிராமத்துக் கோவில்களில் சிறப்பு அலங்காரங்களும் பூசனைகளும் அதனை கண்டு மகிழ தங்களையும் சிறப்புற அலங்கரித்து வரும் பெண்டுகளும், ஊரில் மற்ற வீடுகளின் அலங்காரங்களைக் காணவேண்டி வீதி வலம்வரும் இளசுகளும் என்று ரொம்பவும் விமர்சையாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம் மெழுகுவர்த்திகளும் சீரியல் பல்புகளும் வந்த பொழுதும் காற்றில் அசைந்தாடும் என்னை விளக்குகள்தாம் மனதை கவர்கிறது. சில வீடுகளின் சுவற்றில் விளக்கிலிருந்து என்னை வழிந்து கோடுகளாக அடுத்து சுண்ணாம்பு அடிக்கும் நாள்வரை கார்த்திகையை நினைவுபடுத்தும்.

பொரி உருண்டை, அவல் உருண்டை, அடை வெண்ணை என்று நாவுக்கும் விருந்து உண்டு. ஆக மொத்தத்தில் வேறு எந்த விசேஷங்களும் தராத ஒரு சந்தோஷத்தை நான் கார்த்திகை பண்டிகையில் அனுபவிக்கிறேன்.

Saturday, December 6, 2008

ஸ்ரீரங்கம்...

அது என்னவோ தெரியவில்லை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்குப் போனால் என்னுள் ஏதோஒரு இன்ப உணர்வு தலை தூக்குகிறது. ஏதோ ரொம்ப நாள் பிரிந்திருந்த ஒன்றை நெருங்கும் உணர்வு. என் ஆழ்மனத்தின் அடையாளம் எனக்கு சரிவர புரிவதில்லை. ஆனால் அந்த இன்பத்தை அனுபவிக்கவேண்டி திரும்பவும் அங்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பு என்னை உந்துகிறது. சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்ற போது அத்தகைய ஒரு உணர்வு ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையினால் காவிரி ஆற்றின் கரைகளைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடியது. ஆங்காங்கே மணல் திட்டுக்களும், கரையோரம் கோரைப் புல்பதர்களும், மணல் திட்டுக்களில் ஆடும் சிறார்களும், ஐய்யப்பன் பக்தர்களும் எல்லாமே பார்க்க இனிமையாக தோன்றின. வழிநெடுகிலும் சாதாரணமாக சகதியும் குப்பையும் பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்திருக்கும் வாய்க்கால்களில் இன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஸ்ரீரங்கம் போய சேரும்போது சயந்திரம் ஆகிவிட்டது. உடனே கோவிலுக்குப் புறப்பட்டு விட்டேன். முன்னொரு சமயம் போனபோது நேரம் போதாமையால் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்த முறையாவது இந்த ஆலயத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கவலை. கோவிலில் கூட்டம் அதிகமில்லை. பெருமாளை நன்றாக சேவிக்க முடிந்தது. தாயார் சந்நிதி, கண்ணாடி அறை சேவை , ஆயிரம்கால் மண்டபம் என்று எல்லாவற்றையும் ஆனந்தமாக கண்டு களித்தேன். மறுநாள் காலை விஸ்வரூபதரிசனம் காண தாய் தந்தையருடன் சேர்ந்து கோவிலுக்கு போனேன்.

விஸ்வ ரூபதரிசனம் துவங்கும் நேரம் காலை ஆறு மணி என்றரிந்துகொண்டு முன்னமே போய் தரிசன டிக்கெட் எடுத்துக் கொண்டேன். பெருமாள் சந்நிதியின் முன் ஒருவர் இருந்து வீணை இசைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஒரு பசு மாட்டை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமமிட்டு நிறுத்தியிருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு யானை அங்கு வந்து பகவானை நோக்கி நின்றது. அதற்குப் பின்னால் ஒரு குதிரை. திரை விலகியவுடன் யானை துதிக்கையை தூக்கி மூன்று முறை பிளிறியது. பின்னர் இவை எல்லாம் விலக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர். அப்பா அம்மாவுடன் சேர்ந்து சென்றால் எல்லாமே விசெஷமாகிவிடுகிறது. அப்பாவைக் கண்டவுடன் பட்டார் அவரை அருகில் அழைத்து பெருமாளை நன்றாக சேவிக்கச் சொன்னார். ஆதி செஷன், பள்ளி கொண்ட பெருமான் , ஸ்ரீதேவி , பூதேவி என்று விளக்கி எல்லாவற்றையும் காண்பித்தார். இவ்வளவு ஆனந்தம் என்று சொல்ல முடியாது. நான் நினைத்திருந்ததைவிட ஒருபடி அதிகமாக அனுபவித்தேன்.

Monday, December 1, 2008

உயிரே உன் விலை என்ன???

ஆளை அடிக்க முடியாவிட்டால் அவன் பீயை அடிப்பது என்று கிராமப்புறத்தில் ஒரு கூற்றுண்டு. அதுபோல் உள்ளது சமீபத்தில் மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம். எதிரியை எதிர்கொள்ள முடியாத கோழைகளின் கொடூரச் செயல். இத்தனை வீரம் என்று, தியாகம் என்று எண்ணும் இதயங்கள் வெட்கித் தலை குனியட்டும்.
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கும் அவன் விரும்பும் இறைவனை வழிபடுவதற்கும் உத்தரவாதமளிக்கும் ஜனநாயகத்தை விரும்பாத ஒரு கும்பல், தங்கள் சித்தாந்தமும், தங்கள் இறைவனும் சிறந்தது, மற்றவை அனைத்தும் அழிந்துபோக வேண்டியது என்று நம்பும் காட்டுமிராண்டிகள் தங்கள் ஆதாயத்துக்காக இளம் தலைமுறையினரை மூளைச் சலவை செய்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

இந்தப் பிரிவினைவாதம் நம் நாட்டிலும், ஏன், உலகம் முழுவதுமே பரவிக் கிடக்கிறது. மக்களை பிரித்தாளும் போக்கு மாறவேண்டும். இதற்க்கு தடையாக மதமும் கட்சிகளும் அல்லது வேறேதும் இருந்தால், அதனை உணர்ந்து கிள்ளி எறியவேண்டிய பொறுப்பு அமைதி விரும்பும் அனைவருக்குமே உண்டு.
மாறாக இங்கு நாம் சிறு வயது முதலே இந்த விஷங்களை நம் சமுதாயத்தில் விதைத்துவிட்டு இப்பொழுது அழுது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.

தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது அவ்வளவு சுலபமல்ல. அனால் அந்த சிந்தனையை விதைக்காமலிருந்தால் இந்த அளவுக்கு சேதங்கள் விளையாமல் தடுத்திருக்கலாம்.