Saturday, October 17, 2009

தீபாவளி......

இந்த ஆண்டு எனக்கு தீபாவளி கொண்டாட்டம் ஏதுமில்லை. அதனால் மற்றவர் கொண்டாடும் தீபாவளியாக இது அமைந்தது. நான் தூரத்திலிருந்து ரசிக்கும் பார்வையாளனாக இருந்து கண்டு களித்தேன். சாதரணமாகவே தீபாவளியன்று எல்லோரும் பரபரப்பாக குளித்து முடித்து பட்டாசு வைக்க துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மத்தாப்பும் கம்பி திரியும் வைக்க பெரியவர்கள் வெடிகளை கொளுத்துவார்கள். சமீப காலமாக ஸ்பெஷல் வெடிகள் வந்து மார்க்கெட்டை கலக்குகிறது. முன்னம் கேள்விப்படாத ஆகாய வாணங்கள் கலர் கலராக வித விதமாக காசுக்கேற்ற அளவில் அழகாய் உயர்ந்து மலரும். இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை. அதனால் குழந்தைகள் வீட்டில் தங்காமல் தெருவில் நின்று வெடி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மில்களிலும் பணிமனைகளிலும் வேலை செய்வோர் போராட்ம் நடத்தி போனஸ் வாங்கி அத்தனையும் புகையாக்கி சந்தோஷப்படுகிறார்கள். இப்படி ஒருநாள் சந்தோஷப்படுவதன் அர்த்தம் என்ன யோசித்தும் புரியவில்லை. மாற்ற நாளில் முதுகொடிய வேலை செய்ய வேண்டும். அனால் பணம் கைக்கு வந்ததும் புதுத் துணி எடுத்து , தின்பண்டம் வாங்கி , பட்டாசு வாங்கி, ஒரே நாளில் அத்தனையும் காலி பண்ணுவதில் என்ன இருக்கிறது? கேட்டால் மாற்ற எல்லா செலவுகளும் அவசியம் தானா என்று எதிர் கேள்வி வருகிறது. யார் பதில் சொல்வது?

Monday, October 12, 2009

உன்னைப்போல் ஒருவன்.

மலையாளத்தில் சாணக்யன் என்ற ஒரு படம் வந்தது. டெக்னாலஜி எப்படியெல்லாம் பயன்படுத்த படுகிறது என்று வியக்க வைத்தது அந்தப் படம். பின் குருதிப் புனல், காக்க காக்க இரண்டும் போலீஸ் காரரின் குமுறல்களை வெளிப்படுத்தின. இப்பொழுது எல்லாவற்றையும் குழைத்து ஒரு படம் உன்னைப்போல் ஒருவன். இதில் நெட்வொர்க் ஹாக்கிங் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்க முடியும் என்று சொல்கிறது. மோகன்லால் ஒரு போலீஸ் எப்படி தன் தொழிலை நேசிக்க முடியும் என்று காட்டுகிறார். கதை ரொம்ப சிம்பிள். ஒரு வெடிகுண்டு மிரட்டல் சென்னை போலீசை ஓடவைக்கிறது. தீவிர வாதிகள் நான்குபேரை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் ஊரில் குண்டு வெடித்து உயிர்சேதம் ஏற்படும் என்ற மிரட்டல். இறுதியில் விடுவிக்கப்பட்ட தீவிரரவாதிகள் குண்டு வைத்து கொல்லப்படுகிறார்கள். இறுதியில் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் அழிக்க முடியும் என்ற தத்துவம்.

படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அனாமதேய கமலகாசன் துளியும் சிரமம் இல்லாமல் தன் பங்கை செய்திருக்கிறார். ஆனால் ஒரு சிக்கலான கட்டத்தில் எவ்வளவு டென்ஷன் ஆகா முடியும், ஒரு நல்ல முடிவு காண எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் ஐ . ஜி. ஆர். மாராராக மோகன்லால் திறமையாக செய்திருக்கிறார். கமலகாசன் போன்ற ஒருவர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய போலீசுக்கு மிரட்டல் விடும்போழுதே இது வேறே எதோ விஷயம் என்று ஒரு பொறி தட்டுகிறது. இந்த வேஷத்தில் நாசர் நடித்திருந்தால் நமக்குள் வேறு மாதிரி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி , பிறகு இறுதியில் தீவிரவாதிகளைக் கொல்லும்பொழுது நமக்கு ஒரு ஆச்சரியம் கலந்த திருப்பம் ஏற்பட்டிருக்கும்.

தீவிரவாதத்துக்கு மருந்து தீவிரவாதம்தான் என்ற கருத்து மிகவும் ஏமாற்றமளிக்கிறது. காந்தியை இடதுகைப் பழக்கதுகாக ஏற்கும் ஒருவர் அவர் கொள்கைகளை புறக்கணிப்பது நன்றாயில்லை. கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பரத் ரெட்டி மிகவும் நன்றாக உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான படம். அதில் ஐயமில்லை. ஆனால் நெருடல்களுக்கும் பஞ்சமில்லை.

Monday, October 5, 2009

பழைய பள்ளி நினைவுகள்.


அக்டோபர் 2.
இந்த நாள் என் நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவான நாள். நான் ரயில்வே ஸ்கூலிலிருந்து வெளிவந்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து சிரித்து மகிழ்ந்த நாள். பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் வணங்கி வழிபடும் பள்ளியையும் ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்த நாள். இந்த நாளில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து ஒரு பெரிய கூட்டம் நடத்தி தாங்கள் வரும் நாட்களில் செய்ய இருக்கும் சேவைகளை வெளிப்படுத்தினோம். இந்த பள்ளிக்கு நல்ல குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் ஒன்றை கொடையளிதோம்.
பெரிய விருந்து ஒன்றுமில்லைஎன்றாலும் மனம் நிறைய சந்தோசத்தை கொண்டு வந்தவரை உபசரித்தோம். பல ஆசிரியர்களும் ஆசிரியைகளும் வருகை தந்து சிறப்பித்தனர். பள்ளியில் நிலையை உயர்த்துவதற்கு பலரும் பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் நினைவுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை.