குருவியைப் பறக்க விடுங்கள் என்று எழுதியதும் , நிறையப்பேர் என்னிடம் "நீ எப்போ விஜய் ரசிகன் ஆனாய் " என்று கேட்டார்கள். நான் வெறும் ரசிகனாக இருந்து எழுதியது அது. யாருக்கும் ரசிகனாக அல்ல. இன்று நான் தசாவதாரம் பார்த்தேன். பலவிதமாக விளம்பரங்கள் வந்து நம் எதிர்பார்ப்பை உச்சத்துக்குக் கொண்டு போயிருக்கலாம். பலவிதமான விமர்சனங்கள் அவற்றை கீழே தள்ளியிருக்கலாம். ஆனால் கமலிடம் நாம் எப்பொழுதும் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அதுதான் வித்தியாசமான படைப்பு. அதை நிறைவாகச் செய்திருக்கிறார் இந்த அற்புதப் படைப்பாளி .
வேறு எதிர்பார்ப்புகள் இன்றி , இது நல்லா இருக்காது என்ற முன்கணிப்பின்றி , இருப்பதை ரசிக்கலாம் என்று திறந்த கண்ணொடும் மனதோடும் தியேட்டருக்கு செல்வோர்க்கு நல்ல விருந்துதான் தசாவதாரம் . கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவ்வளவும் கமல் என்ற மனிதனின் மீதுள்ள காழ்ப்பினால் மட்டுமே என்பது படம் பார்த்தால் புரியும் . சீரான ஒரு வரிக் கதை . அதை சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் டைரக்டர் ரவிக்குமார். பல உப கதைகளும் அழகாகக் கோர்க்கப்படிருக்கின்றன. வெவ்வேறு வித்தியாசமான தோற்றங்களில் கமலின் திறமையும் உழைப்பும் வெளிவந்திருப்பது நிதர்சனம் .
ஒரு பெரிய படைப்பில் சிறு சறுக்கல்கள் இருந்தால் அதன் முழுமையை ஒன்றும் பாதித்துவிடாது. அப்படி சில சறுக்கல்கள் இருந்தால் (உதாரணம் : இன்ஸ்பெக்டர் பலராம் , ஹெளிக்காப்டரிலிருந்து பைனாக்குளர் மூலம் கிருமிகளை காண்பது ) அவற்றை ஒதுக்கிவிட்டு மற்றவற்றை ரசிக்கலாம். மாறாக மதத்தை தூஷிக்கிறார் , கடவுளை வெறுக்கிறார் என்பன போன்ற வாத விவாதங்களில் ஈடுபடுவது நன்றாக இல்லை.
பத்து கதாபாத்திரங்கள் வெவ்வேறு கெட்-அப்பில் மிகவும் நேர்த்தியாக அமைத்திருக்கின்றன . வில்லன் பிளெச்சர் , பாடகர் அவதார் சிங் , வைணவர் ரங்கராஜன் நம்பி என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் தன்மை குன்றாவண்ணம் செய்திருக்கிறார் கமல். பாராட்டுக்கள் . படப்பிடிப்பும் காட்சி அமைப்பும் கதையோடு இசைந்து கண்ணை உறுத்தாத வண்ணம் வந்திருக்கிறது . இசை . . . அதுமட்டும் பரவாயில்லை ரகம். ஸ்பெஷல் எபெக்ட் நன்றாகவும், சுனாமிக் காட்சிகளில் பிரும்மாண்டமாகவும் உள்ளது. "வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நாடாக இருக்கட்டும் " , " கடவுள் இல்லை என்று சொல்லவில்லை , இருந்தால் நன்றாக இருக்கும் " என்பன போன்ற சிந்தனைகளும் நிறைந்து மனித நேயத்தை நிறுத்துகின்றன . நாம் பார்க்கும் பார்வையில்தான் கடவுள் வேறுபடுகிறார். உண்மையாக , இன்மையாக என்று. அதுபோலத்தான் இந்தப்படமும் ரசிகனுக்கும் , விமர்சகனுக்கும் அவரவர் பார்வைபோல் நன்றாகவோ , இல்லாததாகவோ இருக்கும். நன்றி கமல் . இனி நீங்கள் சதாவதாரம் படையுங்கள்.