Friday, April 18, 2008

நினைவுகள்.

பழைமையை நினைவுகூர்வது பழைமையை நோக்கி இழுத்துச்செல்லும் சதியல்ல. அது மறந்த நாட்களை அசை போடும் ஒரு இன்பப் பயிற்சி. அவ்வளவுதான். சரி, தொடங்கிய விஷயத்திற்கு வருவோம். இதுவும் அதுதான். பழைய நினைவுகள். இப்பொழுது சம்மர் வெக்கேஷன் தொடங்கும் சமயம். எங்கள் வீட்டில் திருவிழா கோலம் பூணும் நேரம். முன்பு சென்னையை காலி செய்து சொந்தங்கள் தங்கள் சுற்றம் சூழ எங்கள் வீட்டில் வேடந்தாங்கல் பறவைகள் போல பறந்து வந்து இன்புற்ற நாட்கள் அவை. எங்கள் கூட்டுக் குடும்பத்தின் இன்ப நாட்கள். பெரியவர், சிறியவர் என்று முப்பதுக்கும் மேற்ப்பட்டோர் கூடி மகிழ்ந்த இனிய நாட்கள். இந்த ஆண்டு விடுமுறையின் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்போம் அன்று. வீட்டில் பெண்கள் குடும்ப வேறுபாடின்றி அனைவரையும் உபசரித்தனர். குழந்தைகள் தங்கள் இஷ்டம்போல் கத்திக் கூச்சலிட்டு விளையாடி மகிழ்ந்திருந்தோம். படுக்கப் பாயும் தலையணையும் போதாமல் நாங்கள் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தோம். எதிலும் என்னது உன்னது என்று பாகுபாடு பார்த்ததில்லை. நான் குழந்தைகளில் பெரியவனாதலால் 'சட்டாம்பிள்ளை' போல எல்லோரையும் நடத்தினேன். கூட்டமாக குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, உறங்குவது என்று ஒவ்வொன்றையும் ரசிக்க முடிந்தது. ஹூம்.....
இன்று .... பத்திரிகை வைத்து அழைத்தாலும் யாருக்கும் ஆண்டு இறுதி விடுமுறைக்கு ஊருக்கு வர நேரமில்லை, வசதியில்லை, சூழ்நிலையில்லை. பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தால் சம்மர் கோச்சிங் கேம்ப் அல்லது அடுத்த வருஷத்திய பாடச் சுமையை சுமக்க பிள்ளைகளை அனுப்பி விடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித் தனி தீவாக நின்று மற்றவர்களைப் பார்க்கும் அவலம். 'ஐயோ.. அவனுக்கு இப்பவே டென்த் போர்ஷன் எடுக்க ஆரம்பிச்சுட்டா' , ' பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க இருவத்தி நாலு மணிநேரமும் படிக்கணும்' , ' ஸ்விம்மிங் கிளாஸ் யோகா கிளாஸ் அது இதுன்னு அவ அப்படி பிசியா இருக்கா. எங்க ஊருக்கு வர்றது? ' இப்படி எதோ ஒரு காரணம் காட்டி தட்டிக்கழிக்கத்தான் முடிகிறது நம்மால். மாறிவரும் சூழ்நிலையை குற்றம் சொல்லிப் பயனில்லை. தெரியும்தான். ஆனால் அதற்காக உறவுகளை உதறிவிட்டுவிட வேண்டும் என்ற அர்த்தமில்லையே. இன்றுள்ள ஒற்றைப் பிள்ளை குடும்பங்களில் உறவுகளைப் புரிந்துகொள்ள முனைவோர் இல்லை. காலத்தின் கட்டாயம், வேலை நிமித்தம் என்று கூறுகளாகத் துண்டுகளாக பெரியவர்களை 'ஹோமில்' சேர்த்துவிட்டு குழந்திகளை 'ஹாஸ்டலில்' விட்டு நாமும் தனித் தீவாக வலம் வந்து என்னத்தை கண்டோம்?
கூட்டுக் குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் தீர்வுகளும் இருந்தன. விட்டுக்கொடுத்தல், பகிர்ந்துகொள்ளுதல், பெரியவருக்குக் கீழ்படிதல் என்று பல நல்ல விஷயங்கள் அதில் நிறைதிருந்தன. ஆனால் இன்று அதை எல்லாம் மற்றவருக்காக தியாகம் செய்கிறோம் என்ற கண்ணோட்டம்தான் உள்ளது. அன்று யாரும் 'மற்றவர்' என்று இருக்கவில்லை. எல்லோரும் நம்மவர், நாம் என்ற ஒரு நோக்கு இருந்தது. இன்றைய சூழல் இத்தனை ஒரு இழப்பாக பார்கவில்லையா? இல்லை என்றால் இந்த சமுதாயம் கண் திறக்கவில்லை, உறங்குகிறது. அதனை எழுப்பும் முயற்சியில் சற்றும் மனம் தளராத 'அம்புலி மாமா' விக்ரமன் போலத் திரும்பத் திரும்ப வந்து உருத்துவேன்.

1 comment:

GIYAPPAN said...

Nice comment Balamurugan and thanks for it. But even in those days there was always a tension when we had ladies together. But they did not surface since there was always the elders who head the family. But now, it is your wife who controls the home management. So the strategies you mentioned are followed to speed up the departure of your valuable relatives. What to do? That is the price you pay for a nuclear family. better be on your guard always. Or your 'Boss' will someday give you a similar treatment. Remember you are only an ATM in your home.