சென்ற சில நாட்களாகவே என் இனிய உறவுகளின் வருகை என்னை இன்பக் கடலில் ஆழ்திக்கொண்டிருக்கிறது. மேலும் நான் என் இளமைப் பருவத்தினை அசைபோட இந்த வரவுகள் உதவுகின்றன. நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஆடிப் பாடி ஓடி விளையாடிய நாட்களை நினைக்கையில் மனமும் இளமையாகிறது. இப்பொழுது வந்திருப்பது மீனா, என் மாமன் மகள். அந்த நாட்களில் நாங்கள் நாட்கணக்கில் அரட்டை அடித்து, பாட்டுப் பாடி, சீட்டு விளையாடி, Dumb charade விளையாடி, கும்பலாக ஊர்சுற்றிய நாட்களை நினைவு கூர்ந்தோம். எனக்கு ஹிந்திப் பாடல்களின் வரிகளை அவள் எழுதித்தர நான் அவற்றைப் பாடுவேன். நான் அனு, மீனா, லக்ஷ்மி, சீதாலக்ஷ்மி என்று கூட்டு சேர்ந்து night rounds போனால் இரவு லேட்டாக வீடு திரும்பி பெரியவர்களிடம் பாட்டு வாங்குவோம். போத்தநூரின் நடுங்கும் குளிரில் பெண் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இப்படி இரவு நேரத்தில் வெளியில் போகாதே என்று எத்தனை முறை படித்து படித்து சொல்லியிருக்கிறேன் - இது அப்பா, இப்படி பெண்களை வெளியில் கூட்டிண்டு போய் அவாளை காத்து கருப்பு அடிச்சா பெத்தவாளுக்கு யாரு பதில் சொல்லறதாம் - இது அம்மா, இப்படி எல்லார் வாயிலும் விழுந்தாலும் எங்கள் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆண்பிள்ளைகள் சேர்ந்தால் டீம் பிரித்துக் கொண்டு கிரிக்கெட், பேட்மின்டன் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, தண்ணீர் தொட்டியில் இறங்கி நின்று கூட்டமாகக் குளிப்பது என்று இருப்போம். பெரியவர்கள் எப்பொழுதும் தங்கள் பாட்டை பாடிக் கொண்டே இருப்பார்கள். எங்கள் காதுகள் அவற்றை வாங்கிக்கொண்டதே இல்லை. பிடித்த பாடல்களை உரக்கக் கத்திக் கொண்டு நடப்போம். எதிர்ப்படுவோர் எல்லாரும் எங்கள் கண்களில் தமாஷாகத் தெரிவார்கள். எங்கள் சிரிப்புக்குக் காரணம் தேவையில்லை. அப்பா ஒரு முறை " இவன், அதோ போறானே... அவன் கழுத்து மேல தலை... ம்பான். அதுக்கு இதுகள் எல்லாம் சிரிக்கும்... அர்த்தமே இல்லாம" என்று சொன்னார். நாங்கள் அதற்கும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம். சிரிப்பதற்கும் சந்தோஷப் படுவதற்கும் எங்களுக்கு என்றுமே அர்த்தம் தேவைப்பட்டதில்லை. இன்றுவரை.