Thursday, September 18, 2008

இரவின் மடியில் ....

விண்மீன்கள் கண்சிமிட்ட, வெண்ணிலவு நீந்தி விளையாடும் ஒரு இனிய (கரண்ட் கட்டான) மாலை நேரத்தில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருக்கும்போது நினைவுக்கு வந்தது ஒரு கேள்வி " What are your Turn Ons?"

உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் தங்களை உசுப்பி விடும் சக்தி பற்றி சிந்திக்க அவகாசமிருக்காது. இந்த இனிய இரவில் என்னை உசுப்பிவிட வேறெதுவும் தேவையில்லை. அமைதியான, தனிமையான வீட்டு மொட்டை மாடி, அருகில் என் அபிமான பாடகர்களின் அருமையான பழைய பாடல்கள், தூரத்தில் குழந்தைகளின் சிரிப்பொலி, போத்தநூரின் உறுத்தாத சில்லென்ற குளிர் காற்று . . . இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

வேலை நிமித்தம் பலரை சந்திக்கும் எனக்கு சிலரை மட்டும் கண்டவுடன் பிடித்துவிடுகிறது. இங்கு என் Turn Ons என்னவென்று யோசித்தேன். எனக்கு முதலில் புலப்பட்டது கண்கள். ஆம் கண்கள் இதயத்தின் சாளரங்கள்தான். எத்தனை பேர் தங்களின் கண்களில் உண்மையை வைத்திருக்கின்றனர்? நேராக பாராமல் தாழ்ந்திருக்கும் கண்கள், மிரட்சியுடன் பார்க்கும் கண்கள், சந்தேகத்தை தேக்கியிருக்கும் கண்கள் இப்படித்தான் பெரும்பாலானவை இருக்கின்றன. கண்களில் உண்மையும் தைரியமும் நம்பிக்கையும் கொண்டுள்ளோர் மிகச் சிலரே.

அடுத்து சிரிப்பு. புன்சிரிப்பு. இதில் கண்ணும் இதழ்களும் முகத்தின் பிரகாசமும் ஒருசேர சிரிப்பவர் மிகவும் குறைவு. மனிதனை வெளிக்காட்டுவது முகத்தில் மலரும் சிரிபென்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.

அடுத்தது குரல். நம்மில் பலருக்கும் குரலின் முக்கியத்துவம் தெரிவதில்லை. சிலர் இரட்டை குரலில் பேசுகின்றனர். சொந்தக் குரல் இதுவென்று இனம்காண முடியாமல் தவிக்கின்றனர்.

இதன் பின்னே வருவதுதான் நாம் கற்ற கல்வியும் பயின்ற பயிற்சிகளும். ஒரு சுய அறிமுகம் தருவது என்பது இப்பொழுது மனனம் செய்து ஒப்புவிக்கும் வாய்ப்பாடு போல ஆகிவிட்டது. சுயமாக தன்னை அறிந்து சொல்லும் தெளிவு பலரிடத்திலும் காணப்படுவதில்லை.

இதில் ஒருசிலர் மட்டும் விதிவிலக்காக தன்னம்பிக்கையுடன், நிமிர்ந்த நடையுடன், நேரான பார்வையுடன், முகத்தில் புன்சிரிப்புடன் நம் முன் வந்தமர்ந்து "Good morning. My name is .........." என்று பேசத் துவங்கும்போது அவர்களை முதல் பார்வையில் பிடித்து போவதில் வியப்பென்ன?

No comments: