Saturday, June 21, 2008

இருபது ஆண்டுகளின் இனிமை. . .

இன்றுடன் நான் மணமுடித்து இருபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . இந்த இருபது ஆண்டுகளில் நான் கண்ட , அனுபவித்த இல்லற இன்பம் வார்த்தைகளில் அடங்காது . இன்னும் பசுமையாய் , இன்னும் புதுமையாய் , இன்னும் இனிமையாய் என் இல்லறம் அமையக் காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? என் இல்லக் கிழத்தி , என் அகமுடையாள் , என் வாழ்வில் புகுந்து என்னை ஆட்கொண்ட நல்லாள் , இன்றும் தன் இளமையும் புதுமையும் மாறாமல் , இன்முகத்துடன் செய்யும் சேவைகள் சொல்லிலடங்கா .
இதுநாள் வரை நான் சோர்வு கண்டதில்லை அவளிடத்தில் . சுற்றத்தாரை அனுசரித்து அரவணைத்து ஆதரவு காட்டி அவள் இல்லம் நடத்தும் பாங்கு போற்றுதற்குரியது . துன்பம் சூழும் நேரத்தில் அவள் துணையாய் நின்று தோள் கொடுத்து , ஆதரவு கூறி , அறிவுரை கூறி ஒரு அருமையான தோழியாய் , அமைச்சாய் , அன்னையாய் பல நிலைகளில் இருந்து என்னை நிலை நிறுத்தியுள்ளாள் .

இந்த இருபது ஆண்டு இல்லறத்தில் , நான் இழந்தவை எதுவும் பெரிதாக இல்லை . மாறாக கற்ற பாடங்களும் , தேடிப் பெற்ற செல்வங்களும் ஏராளம் . உழைப்பின் வலிமையையும் , உறுதியையும் , நமக்கு உரியது எக்காலமும் கைகூடும் என்ற திண்மையையும் உணரப் பெற்றேன் . நல்லாசானாய் தந்தை வழிநடத்த , நற்றுணையாய் தாய் இருந்திட வாழ்வில் நற்றடம் பதித்திட வேறென்ன கேட்பேன் . பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் குறிப்பறிந்து நடந்தால் , பெற்றோர்கள் பிள்ளைகளின் உளமறிந்து உறுதுணையாக இருப்பர் . என் குடும்பத்தில் இதன் முழுமையை உணர்கிறேன் . என் பிள்ளைச் செல்வங்கள் தங்கள் துறைகளில் சிறந்து மேன்மை நிலையடைய உழைத்து , என் பெற்றோருக்கு என் நன்றிக்கடனைச் செலுத்துவேன். எனக்கு உறுதுணையாய் , என் நிழலாய் , என் மனைவி இருக்க , வாழ்வில் எந்த தூரமும் கடக்கக்கூடியதே , எந்த சுமையும் சுமக்கக்கூடியதே
, எந்த இலக்கும் எட்டக்கூடியதே , எல்லா வெற்றியும் ஈட்டக்கூடியதே

1 comment:

விக்னேஷ்வரி said...

படிக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். இது என்றும் தொடர வாழ்த்துக்கள்.