சமீபத்தில் கோவையில் காணப்பட்ட ஒரு மாற்றம் , அதன் வானளாவிய விளம்பரப் பலகைகளின் நீக்கம். கோவைக்கு என்னவாயிற்று திடீரென்று? ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இவற்றுக்கெல்லாம் பதில் தேடுவதை விடுத்து நடந்துவரும் மாற்றம் எந்த வகையில் நல்லது என்று பார்ப்போம். ஏற்கனவே பிளெக்ஸ் பிரிண்டிங் வந்த பின், விளம்பரப் பலகைகளின் அகல நீள உயரங்கள் எல்லாம் மிகவும் பெரிதாகி பயமுறுத்துகிறது. இதில் மொட்டை மாடிகள் ஏதும் தெரிந்தால், அதில் கட்டிவிடுகின்றனர் பெரிதாக ஒரு ஹோர்டிங். சினிமா விளம்பரங்கள், துணிக்கடை விளம்பரங்கள், செல்போன் கம்பெனி விளம்பரங்கள், இது தவிர கோவையின் முன்னணி மோட்டார் பம்புசெட் கம்பெனிகளின் விளம்பரங்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்றாக நின்று கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரத்தில் காட்சி தருகின்றன. பாதை ஓரங்களிலும் இவற்றின் பிரேம் பதிக்கப்பட்டு நடப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவது மட்டுமல்லாமல் இவை கட்டிடங்களின் அழகையும் கெடுக்கின்றன. இப்பொழுது விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு, கட்டிடங்களின் உச்சியில் எலும்புக்கூடாய் அவற்றின் பிரேம் மட்டும் நிற்பது ஒரு மாதிரி இருக்கிறது. இவ்வாறே சுவர் விளம்பரங்களும் ஒரு சுவரையும் வெள்ளையாக விட்டு வைப்பதில்லை. தனியார் வீட்டு காம்பவுண்டு சுவர்கள், கூட்ஷெட் ரோட்டிலுள்ள ரெயில்வே சுவர் என்று எங்கு பார்த்தாலும் வண்ணஜாலம்தான். சினிமா போஸ்டர்களும் ஒரு புறம் நாறடிக்கின்றன. தமிழ், ஆங்கிலம் என்று வகை வகையாக போஸ்டர்கள். ஒன்றை கழற்றினால் இன்னொன்றில் விளம்பரம். வானொலியில், தொலைக்காட்சியில், சுவரில் ஏன் ஆகாசதில்கூட விளம்பரங்கள் வந்தால் ஆச்சரியப் படாதீர்கள். இவ்வளவும் எதற்கு? மாசக் கடைசியில் கையில் காசு இல்லையென்றாலும் கடன் தர அட்டைகள்தாம் உள்ளனவே, அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் தேவையில்லாத பொருட்களை வீட்டில் தேக்கி கடனாளியாவதற்குதான். இந்த பேனர்களை மட்டும் எடுத்தால் போதாது. பயனுள்ளதை பார்த்து, தேவையானவற்றை மட்டும் தேர்ந்து, அவசியமானதை மட்டும் வாங்கும் பக்குவத்தை பொதுமக்கள் நடுவில் பரப்பும் விழிப்புணர்வுதான் இன்றைய முதல் தேவை. சிந்திப்பார்களா விளம்பரம் செய்வோரும் அவற்றை நீக்குவோரும்?